
- முஹம்மது பைரோஸ் கான், கூத்தாநல்லூர்.
இரண்டாவது கட்ட நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்துவிட்டது. தமிழகத்தில் மே 13-ல் வாக்குப்பதிவு. இந்தச் சூழலில் குடிமக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.
நாட்டில் பலர் தேர்தலில் வாக்களிப்பதால், தங்களுக்கு என்ன பயன் இருக்கிறது என்ற மனநிலையில் உள்ளனர். இங்கு முக்கியமாக ஒன்றை கவனிக்க வேண்டும். மக்களுக்கு தேர்தலில் வாக்களிக்க ஆர்வம் ஏன் குறைந்து வருகிறது என்பதை அறிந்தால், மக்களின் மனநிலைப் புரிந்து விடும். சிலரை கேட்டால் என்ன சொல்லுவார்கள்... தான் ஓட்டுப் போடுவதால் தனக்கு என்ன இலாபம் இருக்கிறது என்று கேட்பார்களே தவிர, வாக்களிப்பதால் நாட்டுக்கு என்ன நன்மை இருக்கிறது என்று நாட்டை பற்றி கவலை படமாட்டார்கள்.
மக்களின் மனமறிந்து செயல்படும் விதமாக சில அரசியல் கட்சிகள் பணம் கொடுத்து வாக்குகளை பெற முந்தி கொள்கின்றன என்பதை நாம் பத்திரிக்கைகள் வாயிலாக அறிகின்றோம். இந்த நிலை மாற வேண்டும். மக்கள் ஒவ்வொருவரும் தங்களின் பிரதிநிதியாக யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை சுய சிந்தனையோடு முடிவு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு முறை நடக்கும் தேர்தலின் போதும் வாக்கு சதவிகிதம் குறைந்து வருவதை காணுகிறோம். 1984-ம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் அதிக பட்சமாக 63.56% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடைசியாக 1999 நடைப்பெற்ற மக்களவை தேர்தலில் 59.99% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 1984-ம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலை 1999-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.57% சதவிகித வாக்குகள் குறைந்துள்ளன.
இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் மேலே கூறியதைப்போல மக்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறது என்பதை உணரலாம். இன்று பலர் சொல்வதை கேட்டிருப்போம், "யாரு ஆட்சிக்கு வந்தால் என்ன சார், நாம உழைத்தால்தான் உணவு கிடைக்கும்; குடும்பத்தை காப்பாற்ற முடியும்," என்று சொல்லுவார்கள். படிக்காத, பாமர மக்கள் தான் இப்படியெல்லாம் சொல்லுகிறார்கள் என்று நினைத்தால், அது தவறு. இன்று படித்தவர்களும் அதே கருத்தை தான் சொல்லுகிறார்கள். இன்னும் சில பேர் அரசியல்வாதிகளையும், ஆட்சியாளர்களையும் குறை சொல்லி கொண்டிருப்பார்கள். இதையெல்லாம் கூர்ந்து கவனித்தால் இன்று பலரிடம் தேர்தல் பற்றிய விழிப்பு உணர்வு இல்லை என்றே கூறலாம்.
நாட்டில் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிகளும் தங்களின் பணிகளை செய்து கொண்டுதான் வருகிறார்கள். அதில் சிலர் செய்யும் தவறுகள் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் சார்ந்துவிடுகிறது. மக்களின் வாழ்க்கை தரம் உயருவதற்கும், நாடு வல்லரசாக உருவாகி கொண்டிருக்கும் நிலைக்கும் ஆட்சியாளர்களே முக்கிய காரணமாக இருக்கிறார்கள். இதில் அதிகாரிகள், விஞ்ஞானிகளின் பங்கும் உள்ளது. ஒவ்வொரு ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்படி பார்க்கையில், சிறந்த நிர்வாக திறமையுள்ள ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்பது மக்களின் கடமையாக உள்ளது.
நாட்டின் வளர்ச்சிக்காகவும் மக்களின் நலனுக்காகவும் இதுவரை எவ்வளவோ திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன, நிறைவேற்றப்பட்டும் வருகின்றன. அதன் மூலம் அனைவரும் பலன் அடைந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இருந்தபோதிலும் தனக்காக தனிப்பட்ட முறையில் அரசு என்ன செய்தது என்பதை பற்றி சுயநலத்தோடு சிந்திக்காமல் நாட்டுக்காக என்ன செய்கிறார்கள் என்பதை சிந்திக்க வேண்டும்.
ஒரு நாடு வளர்ச்சி பெறுவதற்கு அந்த நாட்டில் அமையும் ஆட்சி முக்கியமான ஒன்றாக இருக்கிறது. நாடு வளர்ச்சி பெற்றால் அந்த நாட்டின் பொருளாதாரம் உயருகிறது. இதனால் வேலை வாய்ப்பு அதிகரிக்கிறது. வேலை வாய்ப்பு அதிகரித்தால் தனி நபர் வருமானம் உயருகிறது. தனி நபர் வருமானம் உயர்ந்தால், நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் மகிழ்ச்சி அடைகிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டும்.
நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம், மக்களின் வாழ்க்கைத்தரம் எல்லாம் ஆட்சியாளர்களின் கையில் இருக்கும் பட்சத்தில் சிறந்த ஆட்சியாளரை தேர்ந்தெடுக்க அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம். ஓட்டு போடுவது ஜனநாயக கடமையாகும். மக்கள் தீர்ப்பே மகத்தான தீர்ப்பு என்பதற்கு இணங்க, மக்களின் ஒவ்வொரு வாக்குகளும் நமது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது.
ஒரு மாணவரின் எதிர்காலம் எவ்வாறு ஆசிரியரின் கையில் உள்ளதோ, அதுபோல நாட்டின் எதிர்காலம் நாட்டில் வாழும் மக்களின் கையில் இருக்கிறது. எனவே தேர்தல் நடைபெறும் அன்று அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்.
நன்றி / விகடன்.காம்
No comments:
Post a Comment