::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Wednesday, May 13, 2009

இன்று இறுதிக்கட்ட ஓட்டுப் பதிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இறுதிக்கட்ட ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதில், 40 தொகுதிகளில் 852 வேட்பாளர்கள் தலைவிதி நிர்ணயிக்கப்படுகிறது. அமைதியான ஓட்டுப் பதிவுக்குத் தேவையான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷனும் போலீசாரும் செய்து, தயார் நிலையில் உள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தல் ஐந்து கட்டமாக நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதன்படி கடந்த மாதம் 16, 23, 30 மற்றும் இம்மாதம் 7ம் தேதிகளில் நான்கு கட்ட ஓட்டுப் பதிவு நடந்து முடிந்தது. இந்நிலையில், ஐந்தாம் கட்டமான இறுதிக்கட்ட ஓட்டுப் பதிவு இன்று நடக்கிறது. தமிழகம், புதுச்சேரி, ஜம்மு- காஷ்மீர், உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில், 86 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. இத்தொகுதிகளில் 1,432 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில், பெண் வேட்பாளர்கள் 93 பேர்; 779 பேர் சுயேச்சைகள். தமிழகத்தில் அதிகபட்சமாக தென்சென்னை லோக்சபா தொகுதியில் 43 வேட்பாளர்களும், கரூரில் 38 வேட்பாளர்களும், மத்திய சென்னையில் 37 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். தமிழகத்திலேயே மிகக் குறைந்த எண்ணிக்கையில் வேட்பாளர்கள் போட்டியிடுவது நாகை மக்களவைத் தொகுதியில்தான் என்பது குறிப்பிட்டத்தக்கது. ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 632 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதல் முறையாக, இத்தேர்தலில் 7,115 மைக்ரோ பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 824 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 4.16 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர். 52 ஆயிரத்து 175 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு துவங்கும் ஓட்டுப் பதிவு, மாலை 5 மணியுடன் முடிகிறது. முடியும் நேரத்தில் வாக்காளர்கள் வரிசையில் நின்றிருந்தால், அவர்களுக்கு டோக்கன் அளித்து, ஓட்டு போட அனுமதியளிக்கப்படும்.தேர்தலில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க, ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 133 கம்பெனிகள் மத்திய போலீஸ் படையினர் பதட்டமான ஓட்டுச் சாவடிகளில் பணியாற்றுவர். இதுதவிர, தமிழக போலீசார் 58 ஆயிரத்து 257 பேரும், முன்னாள் ராணுவத்தினர் 20 ஆயிரம் பேரும், ஊர்க்காவல் படையினர் 5,000 பேரும், ஓய்வுப் பெற்ற போலீசார் 1,000 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தத் தேர்தல், நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறது. தேசிய அளவில் பா.ஜ., ஆட்சியா, காங்கிரஸ் ஆட்சியா அல்லது மூன்றாவது அணி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்யப் போகின்றனர். தமிழகத்தில் சிதம்பரம், மணிசங்கர் அய்யர், இளங்கோவன், பாலு, ராஜா, பழனிமாணிக்கம், வேலு ஆகிய மத்திய அமைச்சர்களும், வைகோ, தா.பாண்டியன், இல.கணேசன், தங்கபாலு, அழகிரி, திருநாவுக்கரசர் போன்ற வி.ஐ.பி.,க்களும் களமிறங்கியுள்ளனர்.இவர்களது எதிர்காலம் மட்டுமன்றி, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் எதிர்காலமும் இன்று முடிவு செய்யப்பட உள்ளது.

தி.மு.க., ஆட்சிக்கு மக்கள் ஆதரவு உள்ளதா என்பதும், அ.தி.மு.க., தலைமையிலான அணியை மத்தியில் ஆட்சியில் அமர்த்த மக்கள் விரும்புகின்றனரா என்பதும் இத்தேர்தலில் முடிவு செய்யப்பட உள்ளது.மேலும், விஜயகாந்தின் தே.மு.தி.க.,வுக்கு உள்ள செல்வாக்கு மற்றும் சரத்குமார், கார்த்திக் போன்றவர்களின் செல்வாக்கும், மனித நேய மக்கள் கட்சிக்கு உள்ள செல்வாக்கும் இத்தேர்தலில் தெரியவரும். காரணம், லோக்சபா தேர்தலில் இக்கட்சிகள் முதல் முறையாக களமிறங்கியுள்ளன.

தேர்தலில் வெற்றியை பெற்றாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஜெயலலிதா, ஸ்டாலின், விஜயகாந்த், கனிமொழி போன்றவர்கள் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டனர். வழக்கமாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்யும் முதல்வர் கருணாநிதி, உடல்நிலை சரியில்லாததால் இம்முறை திருச்சி கூட்டத்தில் மட்டுமே பங்கேற்றார். மேலும், சோனியா, ராகுல் ஆகியோர் ஒரே நாளில் தமிழக பிரசாரத்தை முடித்துக் கொண்டனர். அத்வானி, நரேந்திர மோடி போன்றவர்கள், தங்கள் கட்சியினர் போட்டியிடும் முக்கிய தொகுதிகளில் தீவிர பிரசாரம் செய்தனர்.மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தேசிய தலைவர்களும் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்துள்ளனர். இத்தேர்தலில் இலங்கை பிரச்னையை அரசியல் கட்சிகள் கையில் எடுத்தன. அது எந்தளவுக்கு எதிர்க்கட்சிகளுக்கு கைகொடுக்கும் என்பது, 16ம் தேதி முடிவுகள் வெளியாகும்போது தெரிந்துவிடும்.

-நன்றி / தினமலர்.காம்

No comments:

Blog Archive