::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Thursday, April 23, 2009

நாகை தொகுதி: திமுக, இந்திய கம்யூ., பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல்

திருவாரூர், ஏப். 22: நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக, இந்திய கம்யூ., பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் நேற்று புதன்கிழமை (22-04-2009) தங்களது வேட்புமனுவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவாரூர் மாவட்ட ஆட்சியருமான எம். சந்திரசேகரனிடம் தாக்கல் செய்தனர்.

திமுக வேட்பாளர் மனு: நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன் புதன்கிழமை தனது வேட்புமனுவை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரனிடம் தாக்கல் செய்தார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி, தமிழக பால் வளத் துறை அமைச்சர் உ. மதிவாணன், திருவாரூர் மாவட்ட திமுக செயலர் பூண்டி.கே. கலைவாணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி. துரைவேலன் ஆகியோருடன் வந்து தனது மனுவை ஏ.கே.எஸ். விஜயன் தாக்கல் செய்தார். கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவரும், திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளருமான தாழை.மு. அறிவழகன் மாற்று வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார்.

இந்திய கம்யூ. வேட்பாளர் மனுத் தாக்கல்: நாகை மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். செல்வராசு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவாரூர் மாவட்ட ஆட்சியருமான எம். சந்திரசேகரனிடம் புதன்கிழமை தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதிமுக மாவட்டச் செயலர் ஆர். காம்ராஜ், முன்னாள் அமைச்சர் ஆர். ஜீவானந்தம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலர் கோ. பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலர் ஐ.வி. நாகராஜன் ஆகியோர் முன்னிலையில் மனுவைத் தாக்கல் செய்தார். திருத்துறைப்பூண்டி வட்டம், கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த காத்தையா மகள் சுஜாதா மாற்று வேட்பாளராக வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இவர் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட துணைச் செயலர்.

பகுஜன் சமாஜ் வேட்பாளர் மனுத் தாக்கல்: நாகை மக்களவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் ஜி. வீரமுத்து (38) புதன்கிழமை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். திருவாரூரில் நாகை மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவாரூர் மாவட்ட ஆட்சியருமான எம். சந்திரசேகரனிடம் புதன்கிழமை பிற்பகல் 2.50 மணிக்கு தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் வீரமுத்து. இவர் நாகப்பட்டினம், வெளிப்பாளையம், முனிசிபல் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர். இவரது தந்தை வி. கோபால். இவருக்கு மாற்று வேட்பாளராக நாகப்பட்டினம், வடக்கு பால்பண்ணைச்சேரியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மனுத் தாக்கல் செய்தார்.

சுயேச்சை வேட்பாளர் மனுத் தாக்கல்: நாகை மக்களவைத் தொகுதியில் மயிலாடுதுறை நல்லத்துக்குடி, வைத்தியலிங்கம் மகன் சுயேச்சை வேட்பாளராக முனுசாமி (40) (ஊனமுற்றவர்) சுயேச்சையாக போட்டியிட மனுத் தாக்கல் செய்தார். இவர் தமிழ் மாநில மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுவதாகவும், ஊனமுற்றோருக்கு அரசு வழங்கும் திட்டங்களைப் பெற்றுத் தருவதே தான் போட்டியிடுவதன் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

- நன்றி / தினமணி.காம்

No comments:

Blog Archive