::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Wednesday, May 6, 2009

பிளஸ் 1: சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

திருவாரூர், மே 6: திருவாரூர் மாவட்ட அளவில் பிளஸ் 1 தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.எஸ். ராதாகிருஷ்ணன் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

திருவாரூர் மாவட்ட அளவில் 9-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி திருவாரூர் ஸ்ரீ ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ஏ.எஸ். ராதாகிருஷ்ணன் பரிசுகள் வழங்கினார்.

பிளஸ் 1 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் விவரம் (அடைப்புக்குள் பெற்ற மதிப்பெண்கள்) :
அரசுப் பள்ளி அளவில் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். செல்வபாரதி (1,069), நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ. ஆயிஷா ஷப்ரீன் (1,067), கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜி. திவ்யா (1,032) ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை வென்றனர்.

அரசு உதவிபெறும் பள்ளி அளவில் மன்னார்குடி தூயவளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி தி. தாபியா (1,107), திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் எஸ். சொப்னா (1,100), ஆர். லெட்சுமி பிரியா (1,090) ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை வென்றனர்.

மெட்ரிக் பள்ளி அளவில் புனித ஜூட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி டி. பாரதி (1,116), நவபாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஏ. கோகிலா (1,086), நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் பி.எச். முகமது உசைன் (1,081) ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர்.

9-ம் வகுப்பு: அரசு பள்ளி அளவில் செருவாமணி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் வே. ஆதிகேசவன் (566), அத்திக்கடை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் கே. குமரேசன் (564), விளமல் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் ம. சுப்பையன் (560), கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கே.ஏ. முர்ஷிதா சுமின் (560) ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை வென்றனர்.

அரசு உதவி பெறும் பள்ளிகள் அளவில் மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவர் ஸ்ரீசக்தி (542), மஞ்சக்குடி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சி. சில்வியா (539), ஆர்.எம். புவனேஸ்வரி (536) ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை வென்றனர்.

இவ்விழாவில் முனைவர் செல்வசேகரன், ஸ்ரீ ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் ஆர். ரத்தினகுமாரி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் எம். ராஜமாணிக்கம் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

- நன்றி / தினமணி.காம்

அரசு பேருந்து மோதி ஒருவர் மரணம்

திருவாரூர், மே 5: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே அரசுப் பேருந்து மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் திங்கள்கிழமை இரவு இறந்தார்.

நாகை மாவட்டம், வடகரை பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் குருமூர்த்தி (32). இவர் ஒரு மோட்டார் சைக்கிளில் கூத்தாநல்லூர் அருகிலுள்ள குடிதாங்கிச்சேரி அருகே சென்றபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் உடல் நசுங்கி அதே இடத்தில் குருமூர்த்தி இறந்தார்.

இதுகுறித்து கூத்தாநல்லூர் காவல் நிலைய போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

- நன்றி/தினமணி.காம்

Tuesday, May 5, 2009

நாகை மக்களவை தொகுதி / வேட்பாளர்கள் பயோடேட்டா



நாகை மக்களவை தொகுதி: திமுக வேட்பாளர்- ஏ.கே.எஸ்.விஜயன்

நாகப்பட்டினம்: திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.கே.எஸ்.விஜயன், 3வது முறையாக நாகப்பட்டினம் தனி தொகுதியில் போட்டியிடுகிறார்.

48 வயதாகும் விஜயனின் தொழில் விவசாயம். இவரது தந்தை சுப்பையா முன்னாள் திமுக எம்.எல்.ஏ ஆவார்.

1991ம் ஆண்டு ஒன்றியத் துணைச் செயலாளராக, ஒன்றியச் செயலாளராக இருந்தார். 2004ம் ஆண்டு நாகப்பட்டனம் மாவட்ட திமுக செயலாளராக நிறுத்தப்பட்டார். 1999ம் ஆண்டு முதல் நாகை தொகுதியின் எம்.பியாக உள்ளார்.

3வது முறையாக எம்.பியாக காத்திருக்கும் விஜயன், மக்களிடையே நல்ல பெயர் பெற்றவர். இடதுசாரிகள் ஆதிக்கம் உள்ள இந்தத் தொகுதியில் அவர்களை சமாளிக்கும் திறனும் மக்கள் செல்வாக்கும் கொண்ட வேட்பாளர் என்பதால் இவர் இந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது கிட்டத்தட்ட 2 மாதத்துக்கு முன்பே முடிவாகிவிட்டது.

மக்களவையிலும் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் வாங்கியவர்.


நாகை மக்களவை தொகுதி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் -எம். செல்வராசு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் தனி தொகுதியில் 3 முறை எம்.பியாக இருந்த எம்.செல்வராஜ் மீண்டும் அங்கு போட்டியிடுகிறார்.

நாகை மாவட்டம் நீடாமங்கலம், கப்பலுடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு கமலவதனம் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

மாநில நிர்வாகக் குழு உறுப்பினராகவும், நாகை மாவட்ட
சிபிஐ செயலாளராகவும் இருக்கிறார்.

நாகை தொகுதியில் ஐந்து முறை போட்டியிட்டுள்ளார் செல்வராஜ். இதில் 1989, 1996, 1998 ஆகிய தேர்தல்களில்
வெற்றி பெற்று எம்.பியானார்.

தற்போது 6வது முறையாக போட்டியிடுகிறார். 4வது முறையாக எம்.பி ஆவேன் என்ற நம்பிக்கையி்ல் பணிகளைத் தொடங்கியுள்ளார்.


நாகை மக்களவை தொகுதி: தேமுதிக வேட்பாளர்- மகா. முத்துக்குமார்

நாகை: ரியல் எஸ்டேட் தொழிலை முதன்மையாக பார்த்து வரும் திருத்துறைப் பூண்டியைச் சேர்ந்த மகா. முத்துக்குமார், நாகை தொகுதி தேமுதிக வேட்பாளராக களம் புகுந்துள்ளார்.

36 வயதே ஆகும் முத்துக்குமார் பி.ஏ. படித்த பட்டதாரி. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர்.

இவரது முதன்மைத் தொழில் ரியல் எஸ்டேட். அதில் கிடைத்த பெயருடன் விஜயகாந்த்தின் தேமுதிக வில் இணைந்தார். தற்போது திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளராக இருக்கிறார்.

ரியல் எஸ்டேட்டில் இருப்பதால் நாகை தொகுதி முழுக்க இவருக்கு அத்துப்படியாம்.

தனக்காக நிறையப் பேர் வாக்கு சேகரித்து வருவதாக கூறும் முத்துக்குமார், விஜயகாந்த்தின் பிரசாரம் தனக்கு கூடுதல் பலத்தைத் தரும், நிறைய வாக்காளர்களை கவர்ந்திழுக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார்.

- நன்றி / தட்ஸ்தமிழ்.காம்

Monday, May 4, 2009

இன்று பள்ளிக்கூடங்களில் தேர்வு முடிவுகள்

கூத்தாநல்லூரில் திமுக மகளிரணியினர் தேர்தல் பிரச்சாரம்!

திருவாரூர் மாவட்டத்தில் மே 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருவாரூர், மே 4:
முத்துப்பேட்டை தர்ஹா கந்தூரி விழாவையொட்டி, வருகின்ற மே 6-ம் தேதி திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டி வட்டம், முத்துப்பேட்டை ஜாம்புவானோடை ஹக்கீம் ஷெய்கு தாவூது காமில் வலியுல்லாஹ் தர்ஹாவில் சிறப்பு வாய்ந்த கந்தூரி விழா மே 5-ம் தேதி இரவு நடைபெறுகிறது.

இதையொட்டி மே 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜூன் 6-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 6-ம் தேதி அரசு கருவூலம் மற்றும் சார் நிலை கருவூலங்கள் அரசின் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு செயல்படும்.

இந்த விடுமுறை அரசுத் தேர்வுகள், நேர்காணல்கள் மற்றும் வங்கிகளுக்குப் பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

-நன்றி/தினமணி.காம்

Sunday, May 3, 2009

வாக்களிப்பதின் அவசியம்!

firos

- முஹம்மது பைரோஸ் கான், கூத்தாநல்லூர்.

இரண்டாவது கட்ட நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்துவிட்டது. தமிழகத்தில் மே 13-ல் வாக்குப்பதிவு. இந்தச் சூழலில் குடிமக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.

நாட்டில் பலர் தேர்தலில் வாக்களிப்பதால், தங்களுக்கு என்ன பயன் இருக்கிறது என்ற மனநிலையில் உள்ளனர். இங்கு முக்கியமாக ஒன்றை கவனிக்க வேண்டும். மக்களுக்கு தேர்தலில் வாக்களிக்க ஆர்வம் ஏன் குறைந்து வருகிறது என்பதை அறிந்தால், மக்களின் மனநிலைப் புரிந்து விடும். சிலரை கேட்டால் என்ன சொல்லுவார்கள்... தான் ஓட்டுப் போடுவதால் தனக்கு என்ன இலாபம் இருக்கிறது என்று கேட்பார்களே தவிர, வாக்களிப்பதால் நாட்டுக்கு என்ன நன்மை இருக்கிறது என்று நாட்டை பற்றி கவலை படமாட்டார்கள்.

மக்களின் மனமறிந்து செயல்படும் விதமாக சில அரசியல் கட்சிகள் பணம் கொடுத்து வாக்குகளை பெற முந்தி கொள்கின்றன என்பதை நாம் பத்திரிக்கைகள் வாயிலாக அறிகின்றோம். இந்த நிலை மாற வேண்டும். மக்கள் ஒவ்வொருவரும் தங்களின் பிரதிநிதியாக யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை சுய சிந்தனையோடு முடிவு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு முறை நடக்கும் தேர்தலின் போதும் வாக்கு சதவிகிதம் குறைந்து வருவதை காணுகிறோம். 1984-ம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் அதிக பட்சமாக 63.56% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடைசியாக 1999 நடைப்பெற்ற மக்களவை தேர்தலில் 59.99% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 1984-ம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலை 1999-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.57% சதவிகித வாக்குகள் குறைந்துள்ளன.

இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் மேலே கூறியதைப்போல மக்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறது என்பதை உணரலாம். இன்று பலர் சொல்வதை கேட்டிருப்போம், "யாரு ஆட்சிக்கு வந்தால் என்ன சார், நாம உழைத்தால்தான் உணவு கிடைக்கும்; குடும்பத்தை காப்பாற்ற முடியும்," என்று சொல்லுவார்கள். படிக்காத, பாமர மக்கள் தான் இப்படியெல்லாம் சொல்லுகிறார்கள் என்று நினைத்தால், அது தவறு. இன்று படித்தவர்களும் அதே கருத்தை தான் சொல்லுகிறார்கள். இன்னும் சில பேர் அரசியல்வாதிகளையும், ஆட்சியாளர்களையும் குறை சொல்லி கொண்டிருப்பார்கள். இதையெல்லாம் கூர்ந்து கவனித்தால் இன்று பலரிடம் தேர்தல் பற்றிய விழிப்பு உணர்வு இல்லை என்றே கூறலாம்.

நாட்டில் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிகளும் தங்களின் பணிகளை செய்து கொண்டுதான் வருகிறார்கள். அதில் சிலர் செய்யும் தவறுகள் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் சார்ந்துவிடுகிறது. மக்களின் வாழ்க்கை தரம் உயருவதற்கும், நாடு வல்லரசாக உருவாகி கொண்டிருக்கும் நிலைக்கும் ஆட்சியாளர்களே முக்கிய காரணமாக இருக்கிறார்கள். இதில் அதிகாரிகள், விஞ்ஞானிகளின் பங்கும் உள்ளது. ஒவ்வொரு ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்படி பார்க்கையில், சிறந்த நிர்வாக திறமையுள்ள ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்பது மக்களின் கடமையாக உள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்காகவும் மக்களின் நலனுக்காகவும் இதுவரை எவ்வளவோ திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன, நிறைவேற்றப்பட்டும் வருகின்றன. அதன் மூலம் அனைவரும் பலன் அடைந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இருந்தபோதிலும் தனக்காக தனிப்பட்ட முறையில் அரசு என்ன செய்தது என்பதை பற்றி சுயநலத்தோடு சிந்திக்காமல் நாட்டுக்காக என்ன செய்கிறார்கள் என்பதை சிந்திக்க வேண்டும்.

ஒரு நாடு வளர்ச்சி பெறுவதற்கு அந்த நாட்டில் அமையும் ஆட்சி முக்கியமான ஒன்றாக இருக்கிறது. நாடு வளர்ச்சி பெற்றால் அந்த நாட்டின் பொருளாதாரம் உயருகிறது. இதனால் வேலை வாய்ப்பு அதிகரிக்கிறது. வேலை வாய்ப்பு அதிகரித்தால் தனி நபர் வருமானம் உயருகிறது. தனி நபர் வருமானம் உயர்ந்தால், நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் மகிழ்ச்சி அடைகிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டும்.

நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம், மக்களின் வாழ்க்கைத்தரம் எல்லாம் ஆட்சியாளர்களின் கையில் இருக்கும் பட்சத்தில் சிறந்த ஆட்சியாளரை தேர்ந்தெடுக்க அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம். ஓட்டு போடுவது ஜனநாயக கடமையாகும். மக்கள் தீர்ப்பே மகத்தான தீர்ப்பு என்பதற்கு இணங்க, மக்களின் ஒவ்வொரு வாக்குகளும் நமது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது.

ஒரு மாணவரின் எதிர்காலம் எவ்வாறு ஆசிரியரின் கையில் உள்ளதோ, அதுபோல நாட்டின் எதிர்காலம் நாட்டில் வாழும் மக்களின் கையில் இருக்கிறது. எனவே தேர்தல் நடைபெறும் அன்று அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்.

நன்றி / விகடன்.காம்

கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாயில் நிர்வாகக்குழு கூட்டத்தில்...

கடந்த 19/4/2009 அன்று நடைபெற்ற கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாயில் நிர்வாகக்குழு கூட்டத்தில்...

பெ.அ. முஹம்மது ரஃபீயுதீன் ஜாமியா துவக்கப்பள்ளி தாளாளராகவும்,
ஹாஜி S.E.M.காதர் ஹூசைன் மத்ரஸா நாஜிராகவும் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

N.M.A. சிஹாபுதீன்,
J.M.A. ஷேக் அப்துல் காதர்,
ஜ.மு.ரஹ்மத்துல்லாஹ்,
A.S.M.அப்துல் ரெஜாக்,
R.A.அப்துல் கரீம்,
A.A.அப்துல் ரவூப்,
S.A.ஜபருல்லாஹ் கான்
ஆகிய 7 பேர் கொண்ட பஞ்சாயத்து குழுவும் தேர்தெடுக்கப்பட்டுள்ளது.

நன்றி / தகவல்: ஜ.மு.ரஹ்மத‌்துல‌்லாஹ‌்