::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Friday, August 7, 2009

ஊழியர்கள் வேலைநிறுத்தம்: வங்கிச் சேவை பாதிப்பு

திருவாரூர், ஆக. 6:

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, வியாழக்கிழமை திருவாரூர் மாவட்டத்தில் 67 வங்கிகளில் பணிகள் முற்றிலுமாக முடங்கின.

கோரிக்கைகள்: வங்கி ஊழியர்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஓய்வூதியப் பலனை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். ஊழியர் இறந்தாலோ அல்லது ஊனமுற்றாலோ கருணை அடிப்படையில், அவரது வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வங்கி ஊழியர்கள் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.

இதன்படி திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 67 வங்கிகளில் பணியாற்றும் 737 ஊழியர்கள் பணிக்குச் செல்லவில்லை. வங்கிகளில் மேலாளர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். இதனால் வங்கிப் பணிகள் முற்றிலுமாக முடங்கின.

ஆர்ப்பாட்டம்: வேலைநிறுத்தப் போராட்டத்தை விளக்கி, திருவாரூர் நகர வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் பாரத ஸ்டேட் வங்கிக் கிளை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கச் செயலர் அழகிரிசாமி தலைமை வகித்தார். இந்தியன் வங்கி ஊழியர் சங்கச் செயலர் காளிமுத்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் சங்கக் கிளைச் செயலர் ஏ. அப்துல் ரகீம், அலகாபாத் வங்கியின் அப்துல் சலீம் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

ஆதரவு கூட்டம்: வங்கி ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் ஆயுள் காப்பீட்டுக் கழக திருவாரூர் கிளை முன்பு வியாழக்கிழமை வாயில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கிளைச் செயலர் எஸ். செந்தில்குமார் தலைமை வகித்தார். வளர்ச்சி அதிகாரிகள் சங்கத் தலைவர் ஆர். வீரையன், முகவர் சங்க நிர்வாகிகள் வி. ராமதாஸ், ஏ. அறிவழகன், ஊழியர் சங்க நிர்வாகிகள் ஆர். தட்சிணாமூர்த்தி, ஆர். சங்கரன், எஸ். நித்தீஷ் ஆகியோர் பேசினர். வங்கி ஊழியர்கள், ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர்கள், முகவர்கள் பங்கேற்றனர்.


- நன்றி/ தினமணி.காம்

No comments:

Blog Archive