::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Wednesday, August 12, 2009

பன்றிக் காய்ச்சல்: பதற்றமடைய வேண்டாம் - ஆட்சியர்

திருவாரூர் மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம். அதே நேரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:
காய்ச்சல், இருமல், தொண்டையில் புண், தலைவலி, உடல் வலி, சோர்வு, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாகும்.

இதை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களுக்குச் சென்று வருபவர்களுக்கு இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டுமே பதிவு செய்து சிகிச்சை பெற வேண்டும்.

பொது மக்கள் தும்மல், இருமல் ஏற்படும் போது வாய் மற்றும் மூக்கு ஆகியவற்றை துணியால் மூடிக் கொள்ள வேண்டும். இதேபோன்று, கை, கால்கள், வாய், மூக்கு போன்றவற்றை தண்ணீரில் கழுவி தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்.

மக்கள் நெருக்கடியான இடங்களில் அதிக நேரம் இருக்கக் கூடாது. நோய்க்கான அறிகுறிகள் உள்ளவர்களிடமிருந்து இரண்டடி தொலைவுக்கு தள்ளி இருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத்தக்க சத்தான உணவு, அதிகப்படியான திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

இந்த நோய்க்கு ""டேமி புளு'' என்ற மாத்திரை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நோய்க்கான அறிகுறிகள் உள்ளவர்கள் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெற வேண்டும்.

நோய் தடுப்புக்கென மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, பொதுமக்கள் பதற்றமடையாமல், விழிப்புடன் இருக்க வேண்டும்.

இந்த நோய் குறித்த அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளும் போது மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் தக்க தற்காப்பு சாதனங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த அறிகுறிகள் மாணவ, மாணவிகளுக்கு ஏற்பட்டால் ஆசிரியர்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டுமே மாணவர்களை சிகிச்சை பெற அறிவுறுத்த வேண்டும். காய்ச்சல் உள்ள மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாமென ஆட்சியர் அப்போது கேட்டுக் கொண்டார்.

-நன்றி/ தினமணி.காம்

No comments:

Blog Archive