::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Thursday, January 7, 2010

திருவாரூர் மாவட்டத்தில் வரும் 10ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் வரும் 10ம் தேதி மற்றும் பிப்.7ம் தேதி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடக்கிறது என்று கலெக்டர் சந்திரசேகரன் தெரிவித்தார்.போலியோ சொட்டு மருந்து வழங்குதல் தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கலெக்டர் சந்திரசேகரன் தலைமை வகித்து பேசியதாவது:

போலியோ நோயை அடியோடு ஒழிக்கும் வகையில் வரும் 10ம் தேதி, பிப்ரவரி 7ம் தேதி ஆகிய 2 நாட்கள் நாடு முழுவதும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இதன்படி வரும் 10ம் தேதி நடக்கும் முகாமிற்காக மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 324 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இப்பணியை 109 மேற்பார்வையாளர்கள், மாவட்ட அளவில் 6 மேற்பார்வையாளர்கள் கண்காணிக்க உள்ளனர். கூடுதலாக வருவாய் கோட்ட அளவில் 2 கண்காணிப்பாளர்களும், வட்ட அளவில் 7 கண்காணிப்பாளர்களும் இப்பணியில் ஈடுபடுவர்.

அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதாரநிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் சத்துணவு மையங்கள், வளர்கல்வி மையங்கள், பள்ளிகள், ரயில்வே ஸ்டேஷன்கள், பஸ் ஸ்டாண்டுகள், கோயில்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் நடமாடும் குழுக்கள் மூலம் போக்குவரத்து வசதி இல்லாத இடங்களிலும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் பணிகள் நடக்கும் இடத்திலும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இந்தாண்டு புதிய முயற்சியாக வழக்கமாக காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம்களில் வழங்கப்படும் இந்த மருந்து கூடுதலாக விடுபட்டவர்களுக்கு பஸ்ஸ்டாண்டுகளில் மட்டும் மாலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை வழங்கப்பட உள்ளது.

இந்த முகாம் வாயிலாக திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 348 குழந்தைகள் பயனடைவர். எனவே அனைத்து 5 வயதிற்குட்ட குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ நோய் இல்லாத சமுதாயம் உருவாக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

டி.ஆர்.ஓ. ஜான் லூயிஸ், இணை இயக்குனர் (சுகாதாரம்) கோவிந்தசாமி, துணை இயக்குனர் சகாயமேரி ரீட்டா, ஒன்றியக்குழு தலைவர்கள் பாண்டியன், கமாலுதீன், முதன்மைக்கல்வி அலுவலர் கலைவாணி, மாவட்ட கல்வி அலுவலர் காந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Blog Archive