::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Friday, December 31, 2010

இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்துவது தமிழகம் முழுவதும் விரிவாக்கம்

ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி கடந்த 1ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், பலருக்கு இணைய தளத்தில் மின் கட்டணம் செலுத்தும் வழிமுறைகள் தெரிவதில்லை.

இதுகுறித்து
, வெளியிட்டுள்ள அறிக்கை: www.tneb.in என்ற இணைய தளத்தில் சென்று, billing services என்ற தலைப்புக்குள் online bill payment என்ற உபதலைப்பை கிளிக் செய்து மின்கட்டண நுழைவாயில் (internet payment gateway) படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து மின்கட்டணத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி பண அட்டை மூலமாகவோ, அனைத்து மாஸ்டர்/விசா கடன் அட்டைகள் மூலமாகவோ இந்த இணைய தளத்தில் செலுத்தலாம் . இணைய தள வணிக சேவை மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி ஆக்சிஸ், ஐசிஐசிஐ, சிட்டி யூனியன், ஐஓபி, இந்தியன் வங்கிகளில் உள்ளது.

வீடு மற்றும் கடைகளுக்கான மின் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்துவதற்கான வசதியை மேலும் சில வங்கிகளுக்கு விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்திக்குறிப்பு: குறைந்த அழுத்த மின் இணைப்பு பெற்றுள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு மின் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் தமிழகம் முழுதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ, இந்தியன் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் கனரா வங்கிகள் மூலம் மின்கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த முடியும். மேலும் கூடுதலாக பல வங்கிகளை இத்திட்டத்தில் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆகவே
, மின்கட்டணத்தை www.tneb.in என்ற இணையதளம் மூலம் நுகர்வோர்கள் எளிதில் கட்டலாம்.

Tuesday, December 28, 2010

உலமாக்கள் நல வாரியத்தில் உதவிகள் பெற அழைப்பு

திருவாரூர் மாவட்டத்தில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் நலத் திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் இதுவரை 442 பேர் உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொண்டு அடையாள அட்டைகள் பெற்றுள்ளனர். இந்த வாரியத்தின் மூலம் வழங்கப்படும் பல்வேறு நலத் திட்ட உதவிகளின் விவரம் அடையாள அட்டையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, கண் கண்ணாடி, ஈமச்சடங்கு உதவித் தொகை ஆகியவற்றை மட்டும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரே உடனுக்குடன் ஒப்பளிப்பு செய்யும் வகையில் இம் மாவட்டத்துக்கு இதுவரை ரூ. 87,500 ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரையில் 4 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ. 7,000 வழங்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்காணும் அடையாள அட்டை பெற்றுள்ளவர்கள் தகுதியான நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

மேலும், இந்த வாரியத்தில் இதுவரை பதிவு செய்யாத நபர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் மற்றும் தஞ்சையில் உள்ள மாவட்ட வக்பு வாரிய ஆய்வாளர் அலுவலகம் ஆகியவற்றில் விண்ணப்பங்களை நேரடியாகப் பெற்று முழுமையான சான்றுகளுடன் விண்ணப்பித்து வாரியத்தில் உறுப்பினராகிப் பயன் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

- நன்றி (தினமணி.காம்)

Thursday, December 16, 2010

மேல் சபை வாக்காளர் பட்டியல் சேர நாளை கடைசி நாள் (டிசம்பர் - 17)

தமிழக மேல் சபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதில் இரண்டு பிரிவில் உள்ளவர்களே வாக்களிக்க முடியும். யாரெனில் ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள்.

தமிழக அரசின் மேல் சபைக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், வட்டாச்சியர் அலுவலகங்களில் சென்று சரிபார்த்துகொள்ளலாம். இதில் விடுபட்டவர்கள், மேலும் புதிதாக விண்ணப்பிக்க விரும்புவோர் நீடாமங்கலம்
வட்டாச்சியர் அலுவலகத்தில் டிசம்பர் 17 வரை விண்ணப்பிக்கலாம். இறுதி வாக்காளர்பட்டியல் விரைவில் வெளியிடப்படும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கவும். உங்களுக்கு தெரிந்த நமதூர் பட்டதாரிகள், ஆசிரியர்கள் இருந்தால் இந்த தகவலை தெரியப்படுத்த வேண்டுகிறோம்.

யார் விண்ணப்பிக்கலாம்?
இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலை கழகத்தில் 2007-ல் பட்ட படிப்பு முடித்தவர்கள் மற்றும் 2007-க்கு முன்பாக பட்ட படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தொலைதூர கல்வியில் பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

எங்கு விண்ணப்பிப்பது?
நீடாமங்கலம் வட்டாச்சியர் அலுவலகம்

எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பங்கள் விநியோகிப்படும் மையங்களில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். http://www.elections.tn.gov.in/tnmlc/FORM18TAMIL.pdf
இணையதளத்திலும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் (Download) செய்து நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப ப‌டிவத்துடன் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்:

1. பட்ட சான்றிதழ் (Degree Certificate or provisional Certificate )
2. குடும்ப அட்டை (Ration Card) அல்லது ஓட்டுனர் உரிமம் (Driving Licence)
3. வேறு முகவரியில் வசிப்பின் வீட்டு வாடகை ரசீது (அல்லது) இருப்பிடச் சான்றிதழ்

மூல சான்றிதழை (ஒரிஜினல் சர்டிபிகேட்) சமர்பிக்க வேண்டாம். சான்றிதழை நகல் (Xerox copy) எடுத்து Self Attested செய்து சமர்பித்தால் போதும். ஆனால் ஒரிஜினல் சர்டிபிகேட்டை அதிகாரி சரிபார்க்க உடன் எடுத்து செல்வது அவசியம்.

மேலும் விபரங்கள் நமதூருக்கான நீடாமங்கலம் வட்டாச்சியர் அலுவலகத்தில் (Ph: 04367 260456) அல்லது இந்த இணையத்திலும் http://www.elections.tn.gov.in/tnmlc.html தெரிந்துகொள்ளலாம்.

Sunday, October 17, 2010

மின்சார வாரிய அறிவிப்பு

நாளை (18-10-10) திங்கள் கிழமை காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை துணை மின் நிலையங்களின் பராமரிப்பு பணிகள் காரணமாக கூத்தாநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

Tuesday, August 17, 2010

அன்னை கஸ்தூரிபா காந்தி நர்சரி & பிரைமரி பள்ளி (மாதாந்திர தேர்வு முடிவுகள் ஜூலை -2010)

லெட்சுமாங்குடி, கம்பர் தெருவில் இயங்கிவரும் அன்னை கஸ்தூரிபா காந்தி நர்சரி & பிரைமரி பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவிகளின் ஜூலை -2010 மாதாந்திர தேர்வு முடிவுகள‌ை வெளியூர் அல்லது வெளிநாட்டில் பணியாற்றிக் கொண்டிருக்கும் தந்தைமார்களின் கவனத்திற்கு எடுத்து செல்லவே இம்முயற்சியை அன்னை கஸ்தூரிபா காந்தி பள்ளியின் நிர்வாகம் ‌மேற்கொண்டுள்ளது.

உங்களின் பிள்ளைகள் இப்பள்ளியில் படித்துக் கொண்டிருப்பின், ஒவ்வொரு மாதாந்திர மற்றும் பருவ தேர்வுகளின் முடிவுகளை தேர்வு மு‌டிந்த 15 நாட்களுக்குள் எதிர்பாருங்கள்.


மாணவர்களின் நலனுக்காக என்றென்றும்...
அன்னை கஸ்தூரிபா காந்தி நர்சரி & பிரைமரி பள்ளி,
(நாளைய அதிகாரிகளுக்கான இன்றைய பள்ளி)
கம்பர்தெரு, லெட்சுமாங்குடி.
போன்: +91 4367 234384
செல் : +91 9976 234384

Monday, August 9, 2010

வினாடி - வினாப் போட்டிகள்: கூத்தாநல்லூர் மன்ப உல்உலா மேல்நிலைப்பள்ளி சாதனை

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பிலான துளிர் அறிவியல் வினாடி-வினாப் போட்டிகளின் அனைத்துப் பிரிவுகளிலும் கூத்தாநல்லூர் மன்ப உல் உலா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று, சாதனை படைத்தனர்.

வினாடி வினா நிகழ்வுக்கு அறிவியல் இயக்கத்தின் ஒன்றியத் தலைவர் நீலன். அசோகன் தலைமை வகித்தார். நுகர்வோர் பாதுகாப்பு குழுச் செயலாளர் எம். அப்பாவு முன்னிலை வகித்தார்.

வினாடி- வினா நிகழ்ச்சியை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கே. பாரதி தொடக்கி வைத்தார். நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவர் பி.எம். கமால்தீன் வாழ்த்திப் பேசினார்.

போட்டிகள் மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டன. 6,7,8 ஆம் வகுப்புகள் ஒரு பிரிவிலும், 9,10 வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவிலும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் மற்றொரு பிரிவிலும் பங்கேற்றனர்.

இதில் முதல் பிரிவில் கூத்தாநல்லூர் மன்பஉல்உலா மேல்நிலைப் பள்ளி முதலிடமும், பொதக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடமும், பொதக்குடி தெற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மூன்றாமிடமும் பெற்றன.

இரண்டாம் பிரிவான 9,10-ம் வகுப்புகளுக்கான பிரிவில் கூத்தாநல்லூர் மன்ப உல்உலா மேல்நிலைப் பள்ளி முதலிடமும், பொதக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடமும், நீடாமங்கலம் மேல்நிலைப் பள்ளி மூன்றாமிடமும் பிடித்தன.

மேல்நிலைப் பிரிவு போட்டிகளில் கூத்தாநல்லூர் மன்பஉல்உலா மேல்நிலைப் பள்ளி முதலிடமும், நீடாமங்கலம் மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடமும், பொதக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மூன்றாமிடமும் பிடித்தன.

போட்டிகளில் வென்றவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் நமது www.koothanallur.co.in இணையதளத்தின் சார்பில்
பாராட்டுதலையும், பயிற்சியளித்த ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Saturday, July 24, 2010

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்விக் கடன்

திருவாரூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு 3 சதவீத வட்டியில் கல்வி கடன் வழங்கப்படவுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன்.

இதுகுறித்து ஆட்சியர் எம். சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் ஆண்டுக்கு ரூ. 50,000 என ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.2.50 லட்சம் வரையில் கடன் வழங்கப்படும். பயனாளிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சி மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறமாக இருந்தால் ரூ.39,500 மற்றும் நகர்ப்புறமாக இருந்தால் ரூ.54,500 இருக்க வேண்டும்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் மருத்துவம், பொறியியல், தொழில்கல்வி மற்றும் இதற்கு ஈடான சிறப்பு தொழில் மற்றும் பயிற்சி கல்விகள் பயில வேண்டும்.

இக்கடன் தொகையில் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக்கழகத்தின் பங்கு 90 சதவீதம் மற்றும் மாநில கழகத்தின் பங்கு 10 சதவீதம் ஆகும். இக்கடன் கூட்டுறவு வங்கிகள் மூலமாக வழங்கப்படுகிறது.

மேலும் வழிமுறைகள் மற்றும் கடன் மனு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Sunday, July 18, 2010

இலவச இருதய நோய் பரிசோதனை முகாம்

கூத்தாநல்லூர் ஜாமியா பெண்கள் தொடக்கப் பள்ளியில் இலவச இருதய நோய் பரிசோதனை முகாம் சனிக்கிழமை தொடங்கியது.

குவைத்தில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை, துபையில் உள்ள கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் அமைப்பு, சிங்கப்பூரில் உள்ள கூத்தாநல்லூர் ஜமாத், மலேசியாவில் உள்ள மலேசியன் கூத்தாநல்லூர் ஜமாத் மற்றும் சென்னை பில்ரோத் மருத்துவமனை இணைந்து இந்த மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

முகாமுக்கு கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் சிகாபுதீன் தலைமை வகித்தார். பில்ரோத் மருத்துவமனையின் முதன்மை இருதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். தியாகராஜமூர்த்தி தலைமையில் 5 மருத்துவர்கள் மற்றும் 30 மருத்துவப் பணியாளர்கள் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இந்த முகாம் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது. இந்த முகாமின் மூலம் நமதூரைச் சார்ந்த 550க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெற்றனர். முகாமின் இறுதியில் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக முகாம் நிறைவு கூட்டம் நடைபெற்றது. முகாமை கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் ஒருங்கிணைத்து நடத்தியது.

முகாம் புகைப்படங்கள்:



Sunday, July 4, 2010

நாளை 'பாரத் பந்த்'

பெட்ரோல், சமையல் கேஸ், டீசல், மண்ணெண்ணெய் விலை உயர்வை கண்டித்து நாளை (திங்கள்கிழமை) பாஜக, இடதுசாரி கட்சிகள் தேசிய அளவி்ல் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.

இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழகத்தில் அதிமுக கூட்டணியும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

போராட்டத்தை சமாளிக்க தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் பஸ்கள் வழக்கம் போல் ஓடும் என்று அரசு அறிவித்துள்ளது. ரயில்களும் வழக்கம் போல் ஓடும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பால், குடிநீர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் லாரிகள், வேன்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள் மற்றும் பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாவிட்டாலும் அலுவலகங்களுக்கு வருவோர் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது. அதே போல அசம்பாவித சம்பவங்களுக்கு அஞ்சி குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு பெரும்பாலான பெற்றோர் அனுப்புவதும் சந்தேகமே.

Blog Archive