::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Wednesday, November 25, 2009

வேன் - பைக் மோதல்: பூதமங்கலம் வாலிபர் மரணம்

திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டடக் கட்டுமானப் பிரிவின் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டடக் கட்டுமானப் பணிகளை வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

கூத்தாநல்லூரில் தீயணைப்பு நிலையக் கட்டடக் கட்டுமானப் பணியை ஆய்வு செய்த ஆட்சியர் எம். சந்திரசேகரன் அங்கு தேங்கியிருந்த தண்ணீரை மோட்டார் பம்பு மூலம் வெளியேற்ற உத்தரவிட்டார்.

ஆய்வின் போது பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் இரா. பாஸ்கரன், வட்டாட்சியர் குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவஞானபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர்

பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை வேண்டும் என அலுவலர்களுக்கு ஆட்சியர் எம். சந்திரசேகரன் உத்தரவிட்டார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் 142 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் தொடர்புடைய அலுவலர்களை உடன் அழைத்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த தகுதியுடைய நபர்களுக்கு ஒரு மாத காலத்துக்குள் அட்டை வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

பொதுமக்கள் அலுவலர்களை நம்பி, தங்கள் தேவைகள் குறித்து மனு செய்கின்றனர். எனவே அரசு அலுவலர்கள் அந்த மனுக்களை மனுதாரர் நிலையிலிருந்து பரிசீலித்து உடன் நிறைவேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாரமும் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அடுத்த வாரம் நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பின்னரே மனுக்கள் பெற வேணடும் என்றார் ஆட்சியர்.

Monday, November 23, 2009

அரசின் திட்டங்களை சிறுபான்மையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - மாவட்ட ஆட்சியர்

சிறுபான்மையினருக்கான நலத் திட்டங்களை தகுதியுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாள் ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் தினம் கொண்டாடப்பட்டது.

விழாவுக்குத் தலைமை வகித்து ஆட்சியர் பேசியது: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாளையொட்டி, தேசிய ஒருமைப்பாடு வாரம் கொண்டாடப்படுகிறது. இதன்படி உறுதிமொழி ஏற்பு, சிறுபான்மையினர் தினம், மனித நேய வார விழா, கலை நிகழ்ச்சிகள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு உள்ளிட்டப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

தமிழக அரசு குழந்தைகள், மாணவ, மாணவிகள், திருமண வயதுள்ள பெண்கள், முதியோர்கள் என அனைவருக்கும் தேவையான பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக சிறுபான்மையினருக்கு அவர்களது நலன் கருதி தொழில் செய்ய கடனுதவி, கல்வியில் இட ஒதுக்கீடு மற்றும் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை என பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இத் திட்டங்களை தகுதியுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.