::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Sunday, September 13, 2009

கூத்தாநல்லூர் ஜமாஅத் ஆம்புலன்ஸ் விபத்து; ஒருவர் மரணம் - ஓட்டுனர் படுகாயம்

நமது கூத்தாநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களின் அவசர தேவைக்காக 13 ஆண்டு்கள் தொடர்ந்து மருத்துவ சேவைபுரிந்து வந்த நமதூர் ஜமாஅத் ஆம்புலன்ஸ் (SWARAJ MAZDA) விபத்துக்குள்ளாகியது. இது குறித்த விரிவான செய்தித் தொகுப்பு-

கடந்த 08-09-2009 (செவ்வாய்) மாலை 6.00 மணிக்கு திருவாரூரிலிருந்து ஒரு அவசர சிகிச்சை பிரிவு நோயாளியை சென்னையிலுள்ள விஜயா மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துவிட்டு இரவு 10.00 மணிக்கு ஊர் நோக்கி ஆம்புலன்ஸ் திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் கடலூர் - சிதம்பரம் சாலையில் சுமார் 30கி.மீ தொலைவிலுள்ள கொத்தட்டை என்னும் ஊர் அருகில் வந்து கொண்டிருக்கும் போது விபத்துக்குள்ளாகியது.

விபத்துக்கான காரணம் :
(09-09-2009) சுமார் அதிகாலை 3.30 மணியளவில் ஆம்புலன்ஸ் கடலூர் - சிதம்பரம் சாலையில் வந்து கொண்டிருக்கும் போது அதன் பின்னால் வந்த லாரி அதிவேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக வந்து கொண்டிருக்கும் போது, அதே சமயத்தில் எதிரே வந்த காருக்கு வழிவிடுவதற்காக நமது ஆம்புலன்ஸ் ஓட்டுனர் இடது பக்கமாக ஒதுங்கிய போது எதிர்பாராத விதமாக அருகிலிருந்த புளியமரத்தில் மோதி சேதமடைந்தது.

உதவிக்காக சென்றவர் மரணம், ஓட்டுனருக்கு கால் முறிவு :
பொதுவாக வெளியூர் சார்ந்த நோயாளிகளுக்காக ஆம்புலன்ஸ் செல்லும் போது ஓட்டுனருடன் ஒரு நபர் பாதுகாப்பு காரணங்களுக்காக அனுப்புவது வழக்கம். எனவே நமது ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அப்துல் முஹம்மது மற்றும் அவருக்கு உதவியாக முஹம்மது ஜின்னா ஆகியோர் சென்றனர்.

இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகத்தில் வந்த லாரி மற்றும் எதிரே வந்த காருக்கு வழிவிட இடப்பக்கம் ஒதுங்கிய ஆம்புலன்ஸ் சாலையோர புளியமரத்தில் மோத, ஓட்டுனர் அப்துல் மற்றும் அருகே அமர்ந்திருந்த ஜின்னா படுகாயமுற்றனர். உடனே 108 ஆம்புலன்ஸ் சேவை பிரிவிற்கு தகவல் கொடுத்தனர். அவர்களை விபத்திற்குள்ளான ஆம்புலன்ஸிலிருந்து மீட்ட 108ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்கள் அதிகாலை 3.50 மணியளவில் அல்அமான் இயக்க நிர்வாகி ஜனாப். முஹம்மது ரபீயுதீன் அவர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு இருவரையும் கொண்டு சென்றனர். அப்போது வழியிலேயே ஜின்னா (உதவிக்காக சென்றவர்) உயிரிழந்தார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்) ஓட்டுனருக்கு வலதுகால், இடுப்பு, தலை போன்ற இடங்களில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நடவடிக்கை:
செய்தியறிந்த ஒருசில மணிகளில் அல்அமான் இயக்க கௌரவ ஆலோசகர், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் விபத்து நடந்த பகுதி பரங்கிப்பேட்டை காவல் சரக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு, விபத்தில் உயிரிழந்தவரின் உடலை எடுத்துக் கொண்டு சுமார் மாலை 6.00 மணிக்கு ஊர் வந்து சேர்ந்தனர். அதன்பின் இறந்தவரின் உடல் அன்றிரவே (09-09-2009) 7.30 மணிக்கு சின்னப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பொது சேவையில் பேரிழப்பு:
அல்அமான் இயக்கத்தின் 18 ஆண்டு கால பொது சேவையிலும், இவ்வியக்கத்தினால் பராமரிக்கப்பட்டு வந்த நமதூர் ஜமாஅத் ஆம்புலன்ஸின் 13 வருட மருத்துவ சேவையிலும் இவ்விபத்து ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். மேலும் உதவிசெய்ய வந்து விபத்தில் இறந்த சகோதரர் ஜின்னா அவர்களின் குடும்பத்திற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். அவருடைய மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துஆச் செய்கிறோம்.

இந்த எதிர்பாராத விபத்து நமதூர் மக்களுக்கு பேரதிர்ச்சியையும், மனவேதனையையும் அளிக்கின்றது. இருப்பினும் நமதூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பலரது உயிர்களை காத்த நமதூர் ஜமாஅத் ஆம்புலன்ஸ், இனியும் தொடர்ந்து பலரது உயிர்களை காக்க இறைவனின் நாட்டத்தினாலும், நமதூர் மக்களின் முயற்சியாலும் சேவையை விரைவில் தொடர இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.

விபத்திற்குள்ளான ஆம்புலன்ஸ் புகைப்படங்கள்:







தகவல் - ஜனாப். P.M.A. முஹம்மது ரபீயுதீன்
(நிர்வாகி, அல்-அமான் இளைஞர் இயக்கம்)

Blog Archive