::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Saturday, September 12, 2009

திருவாரூரில் செப்.19-ல் மத்திய பல்கலை. தொடக்கம்: உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி

திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் வருகிற 19 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது என்றார் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் ரூ. 1,000 கோடி மதிப்பீட்டில், திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழகம் அமையவுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத் தொடக்க விழா திருவாரூரில் செப். 19-ம் தேதி நடைபெறவுள்ளது.

விழா முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் பொன்முடி வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: திருவாரூரில் 516 ஏக்கரில் அமையவுள்ள மத்தியப் பல்கலைக்கழகம் நிகழாண்டிலேயே மாணவர் சேர்க்கையுடன் செப். 19ஆம் தேதி தொடங்குகிறது. இதன் தொடக்க விழாவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி தலைமை வகிக்கிறார். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் பல்கலைக்கழகத்தைத் தொடக்கி வைக்கிறார். துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பாடப் பிரிவுகளைத் தொடக்கிவைக்கிறார். விழாவில் மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். இது தமிழக உயர் கல்வி வரலாற்றில் ஒரு மைல் கல் எனக் கூறலாம்.

தற்போது இந்தப் பல்கலைக்கழகத்தில் மொழிப் பாடங்களாக முதுநிலைத் தமிழ், முதுநிலை ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகள் தொடங்கப்படவுள்ளன. படிப்படியாக ஒருங்கிணைந்த பட்டம், பட்டயம் உள்ளிட்ட பல்வேறு பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

பல்கலைக்கழகத்துக்கு முதல்கட்டமாக, மத்திய அரசு ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இடங்கள் முழுமையாக ஒப்படைக்கப்பட்டவுடன், அங்கு கட்டடங்கள் கட்டத் தேவையான அளவு நிதி ஒதுக்க மத்திய அரசு தயாராகவுள்ளது. புதிதாகக் கட்டப்படவுள்ள பல்கலைக்கழக வளாகம் பசுமை நிறைந்த சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கும் பகுதியாக, அதிக அளவில் மரங்கள் கொண்ட பகுதியாக இருக்கும் வகையில் அமைய திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் பொன்முடி.

தொடக்க விழாவுக்கென அமைக்கப்பட்டு வரும் விழா பந்தல், தாற்காலிகமாக பல்கலைக்கழகம் செயல்படவுள்ள ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டடம் மற்றும் பல்கலைக்கழகத்துக்கென நீலக்குடியில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் ஆகியவற்றை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது மாநில பால்வளத் துறை அமைச்சர் உ. மதிவாணன், மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.பி. சஞ்சய், நாகை தொகுதி மக்களவை உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன், மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன், மாநில உயர் கல்வித் துறைச் செயலர் கணேசன், திமுக மாவட்டச் செயலர் பூண்டி. கே. கலைவாணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவின்குமார் அபினபு, திருவாரூர் நகர்மன்றத் துணைத் தலைவர் ஆர். சங்கர், திமுக ஒன்றியச் செயலர் ஆர்.பி. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

- Thanks / Dinamani.com

Blog Archive