::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Sunday, January 1, 2012

புரசைவாக்கம் இமாம் மவ்லானா நிஜாமுத்தீன் - வஃபாத்

நாடறிந்த மார்க்க அறிஞரும், அற்புதமான சொல்லாற்றல் மிக்கவரும், மார்க்கப் பணிகளில் மிகப் பெரும் சேவையாற்றிவரும், பன்னூல் ஆசிரியரும், திருக்குர்ஆன் விரிவுரையாளரும், சென்னை புரசைவாக்கம் பெரிய பள்ளிவாசலின் தலைமை இமாமும் தமிழகத்தின் மிகப் பெரும் தப்லீக் அறிஞரும் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் கே.ஏ. முஹம்மது நிஜாமுத்தீன் மன்பயீ ஹழ்ரத்அவர்கள், இன்று சனிக்கிழமை (31.12.2011) மாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சிந்திக்க வைக்கும் சொற்பொழிவுக்கு சொந்தக்காரரான ஆலிம் பெருந்தகையான ஹஜ்ரத் அவர்களின் மரணச் செய்தி ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தையும் குலுக்கி எடுக்கும் துக்கச் செய்தியாகியுள்ளது.

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை பற்றிய தெளிவான விளக்கங்களை மக்களுக்கு விளக்கியவர்கள். இதற்காக தென்னகத்தின் தாய்க்கல்லூரியாம் வேலூர் ஜாமிஆ அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபி கலாசாலையை தலைமையிடமாக கொண்டு 1996 முதல் செயல்படும் 'ஹைஅத்துஷ் ஷரீய்யா' என்ற ஷரீஅத் பேரவையில் சிறப்பான முறையில் செயலாற்றி வந்தார்கள் ஹழ்ரத் அவர்கள்.

சன்மார்க்கக் கோட்டையாகிய லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியில் மவ்லவீ ஆலிம் பட்டம் (தஹ்ஸீல்) பெற்று, தப்லீக் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும், சன்மார்க்க விளக்கம் தருவதில் முன்மாதிரியான அறிஞராகவும், சிக்கலான மார்க்க விஷயங்களைக் கூடப் பாமரரும் புரிந்திடும் வகையில் விவரித்துக் கூறுவதில் வல்லவராகவும் திகழ்ந்தவர்கள் ஹஜ்ரத் அவர்கள்.

தமிழகத்தில் மீலாது விழாக்களிலும், ஷரீஅத் மாநாடுகளிலும், கல்லூரி விழாக்களிலும், தப்லீக் இஜ்திமாக்களிலும் ஹஜ்ரத் அவர்களின் உரை என்றால், அதனைக் கேட்கும் கூட்டம் தனியே தெரியும். இதயங்களை ஈர்க்கும் இனிய சொல்லரசாக விளங்கினார். ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவுகள் பல்லாயிரக்கணக்கில் ஒளி, ஒலிப் பேழைகளாக உலகம் முழுவதும் பரவியுள்ளன.

யாருக்கும் பயப்படாமல், எந்தவித மிரட்டலுக்கும் அஞ்சிவிடாமல் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மார்க்கப் பணியாற்றினார்கள்.

ஃபிக்ஹ் சட்டங்கள் குறித்து எழுந்த முறையற்ற விமர்சனங்களுக்கும், குழப்பவாதிகளால் தவறாக சித்தரிக்கப்பட்ட சட்டங்களுக்கும் ஆதாதங்களுடன் பதில் கொடுத்து குழப்பவாதிகளின் வாய்களை அடைத்தார்கள்.

உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் பழக்கமில்லாத மார்க்க மேதை. எதையும் இதயத்தைத் தொடும்படியாக எடுத்துக் கூறும் இயல்புள்ள அறிஞர். சிந்தனையாளர்களுக்கு தூண்டுகோல், செயல் வீரர்களுக்கு துணைவர். மொத்தத்தில் சமுதாய ஒற்றுமைக்கும், சன்மார்க்க எழுச்சிக்கும் பாடுபட்டு மறைந்துள்ள பண்பட்ட தாயி, அவர்களின் மறைவு, உண்மையில் அறிவுலகத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் பொறுமையை தந்தருளவும் நமது இணையதள குழு பிரார்த்தனை‌ ‌செய்து, உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

Tuesday, November 29, 2011

மன்ப உல் உலா அரபிக் கல்லூரியின் ”உலவிய்யு பேரவை”

தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மன்ப-உல்-உலா அரபிக் கல்லூரியின் ”உலவிய்யு பேரவை” 28-11-2011 திங்கள் முதல் செயல்படுகிறது.

இக்கல்லூரியில் பயின்று ”உலவிய்யு” பட்டம் பெற்றவர்கள், தங்களது தற்போதைய முகவரி மற்றும் போன் நம்பரை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு:
E-mail: manbaululasociety@yahoo.com
Mobile: +91 9976 784713,
Tel: +91 4367 234450

Saturday, November 12, 2011

பெரியபள்ளிவாயில் பரக்கத்துல்லா-மெஹர்நிஸா ஹால் திறப்பு விழா

கூத்தாநல்லூர் பெரியப்பள்ளிவாயில் அருகிலிருந்த பழமைவாய்ந்த மிராசுதார் சங்க ஓட்டுக் கட்டிடம் மிகவும் வழுவிழந்து காணப்பட்டதால் அதனை இடித்துவிட்டு புதிதாக காண்கிரீட் கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கான செலவீனங்கள் ஆராயப்பட்டு, ரூ.10 லட்சத்தில் சிறப்பாக கீழ்தளம் 1000 சதுர அடியில் கட்டுவதென முடிவெடுக்கப்பட்டது.

மேற்காணும் ரூ.10 லட்சத்தை நன்கொடையாக அல்ஹாஜ். K.A.பரக்கத்துல்லாஹ் (துணை தலைவர், கூத்தாநல்லூர் பெரியபள்ளிவாயில்) அவர்கள் அளிக்க முன்வந்தார்கள். அவருடைய வேண்டுகோளுக்கிணங்க இவ்வரங்கத்திற்கு “பரக்கத்துல்லாஹ் - மெஹர்நிஸா ஹால்” எனப் பெயரிட்டு கடந்த (10-1-2011) திங்கள் மாலை 5-00 மணியளவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இக்கட்டித்திற்கு கடந்த 10 மாதமாக கட்டிட நிர்மான பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு நேற்று (11-11-11) வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்கு பின் திறப்புவிழா நடைபெற்றது. தரமாக கட்டிடம் உருவாக 10 மாதம் எடுத்துக் கொண்டாலும் கருவில் உருவான 10 மாத அழகு குழந்தையாக இக்கட்டிடம் இன்று காட்சியளிக்கின்றது. கட்டிடத்தை வக்பு செய்த அல்ஹாஜ். K.A.பரக்கத்துல்லாஹ் (துணை தலைவர், கூத்தாநல்லூர் பெரியபள்ளிவாயில்) அவர்களையும் அவரது துணைவியாரையும், கட்டிடம் உருவாக நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணமாக இருந்த அனைவரையும் நமது ஊர் மக்களின் சார்பிலும், நமது இணையதளத்தின் சார்பிலும் மனமார பாராட்டுகின்றோம்.

பல நூறு ஆண்டுகால வரலாற்றில் இடம்பெறப்போகும் இக்கட்டிடம் பற்பல நற்காரியங்களுக்கு இடமளித்து உதவவும், நமதூரின் வளர்ச்சிப் பணியில் முக்கிய பங்களிக்கவும் எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுகின்றோம்.

நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்: