::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Friday, June 10, 2011

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு

திருவாரூர் மாவட்ட ஆட்சியராக ச. முனியநாதன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த இவரை பணியிட மாறுதலில் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமித்து தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது.

இதையடுத்து, ச. முனியநாதன் திருவாரூர் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழக முதல்வர் உத்தரவின்படி அரசுத் திட்டங்கள் முழுமையாகவும், உடனடியாகவும் மக்களைச் சென்று சேர்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்கு அரசு அலுவலர்கள் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி விகிதம் பெருமளவில் குறைந்துள்ளது. இதனால், இந்த மாவட்டத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

திருவாரூர் மாவட்டம் முழுமையாக விவசாயத் தொழில் சார்ந்த மாவட்டமாக உள்ளதால், விவசாயிகளின் குறைகளை கேட்டறியவும், அவர்களது பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்க்கவும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல் துறையினருடன் இணைந்து சீரிய முறையில் செயலாற்றி, சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்றார் அவர்.

முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் எம். தங்கவேல், புதிய மாவட்ட ஆட்சியர் ச. முனியநாதனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். திருவாரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த கா. பாஸ்கரன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமணி.காம்